செல்வ மகள் சேமிப்பு திட்டம் – உங்கள் செல்ல மகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தைக் கொடுங்கள்

sukanya samriddhi yojana tamil

 ஐந்து பெண்களைப் பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான் என்பது நம் பழமொழி. பெண்குழந்தை பிறந்துவிட்டாலே அதற்குத் திருமணம், நகை, வரதட் சினை என நிறைய செலவுகள் வரும் என்ற பயம் பெரும்பாலான மக்களுக்கு இன்னமும் இருக்கத்தான் செய்கிறது. பெண்சிசுக்கொலை, கள்ளிப்பால் ஊற்றுதல் என அனைத்துக்கும் இந்தப் பயம்தான் காரணம். பெண்குழந்தை பிறந்த உடனே முறையான திட்டமிடலும்,முயற்சியும் இருந்தால் பெண்குழந்தையின் கல்வி,திருமணம் குறித்த எந்தவிதக் கவலையுமின்றி இருக்கலாம்.

பெண்குழந்தை பிறந்துவிட்டதே எனப் பெரும் பயத்தில் இருப்பவர்களுக்கு ஆபத்பாந்தவனாய் இருக்கும் அரசாங்கத்தின் திட்டம்தான் செல்வமகள் சேமிப்புத் திட்டம். இது உங்கள் செல்லக் குழந்தையைச் செல்வக் குழந்தையாக்குகிறது,பெண் குழந்தையைப் பொன் குழந்தையாக்குகிறது.

செல்வமகள் சேமிப்பு திட்டம்

சுகன்யா சம்ரிதி யோஜனா எனப்படும் திட்டத்தின் தமிழ் வடிவம்தான் செல்வமகள் சேமிப்பு திட்டம். இத்திட்டத்தை மத்திய அரசு கடந்த 2015ம் ஆண்டு தொடங்கியது. பெண் குழந்தைகளின் எதிர் காலத்துக்குத் தேவையான சேமிப்பாகவும், உயர் கல்வி, திருமணம் போன்ற தேவைகளுக்கான சேமிப்பாகவும்,நல்ல வட்டி வரக்கூடியதாகவும் அதேசமயம் நம்பகத்தன்மை கொண்டதாகவும் வேண்டும் என்பவர்களுக்காக உருவாக்கப்பட்டது அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம்.

பிறந்த குழந்தை முதல் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள்வரை இதில் பங்கேற்கலாம் என்பது இதன் சிறப்பம்சம்.ஒரு பெண் குழந்தைக்கு ஒரு கணக்கு மட்டுமே தொடங்க முடியும்,ஒரு முடும்பத்தில் அதிகபட்சமாக 2 பெண்குழந்தைகளின் பெயரில் தொடங்கலாம்.பெண் குழந்தையின் பெற்றோர் அல்லது பாதுகாவலர், தங்கள் குழந்தையின் பெயரில் கணக்கைத் தொடங்கலாம். இதற்குப் பிறப்புச் சான்றிதழ் அவசியத் தேவை.

இந்தியாவில் இருக்கும் சிறு சேமிப்புத் திட்டங்களிலேயே மிக அதிக வட்டி கிடைக்கும் திட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. 2014 – 15 காலகட்டத்தில் 9.1 சதவீதமாக இருந்த வட்டி விகிதம் தற்போது 7.6 சதவீதமாக குறைந்திருக்கிறது.ஒவ்வொரு நிதி ஆண்டின் இறுதியிலும் இத்திட்டத்துக்கான வட்டி, முதலீட்டு கணக்கில் செலுத்தப்படும்.

எப்படித் தொடங்குவது? எங்கு தொடங்குவது?

பெண்குழந்தைகளின் எதிர்காலச் செலவுகளைத் திறம்பட சமாளிக்க  விரும்புவோர் ஆதார் அட்டையுடன், குழந்தையின் பிறப்புச் சான்றிதழ் அல்லது ஆதார் அட்டையை எடுத்துச் சென்று அருகில் இருக்கும் தபால் நிலையங்களில் தங்கள் செல்ல மகளின் பெயரில் சேமிப்பு கணக்கை தொடங்கிக்கொள்ளலாம்.

திட்டத்தில் சேர்ந்தாகிவிட்டது நிறைய கட்டவேண்டிவருமோ எனக் கவலைப் படத்தேவையில்லை. குறைந்தபட்சமாக 250 ரூபாய் முதல் 1.5 லட்சம் ரூபாய் வரை ஒரு நிதி ஆண்டில் முதலீடு செய்யலாம்.250 ரூபாயில் தொடங்கும் முதலீட்டுத் தொகை 300, 350, 400… என உங்களின் பொருளாதாரத்துக்குத் தகுந்த வகையில் செலுத்தலாம்.

மாதாமாதம் ஒருவர் ரூ.1000 வீதம் சேமித்து வந்தால், திட்டம் முதிர்வு காலத்தை எட்டியவுடன் வட்டியுடன் சேர்த்து ரூ.5.09 லட்சம் பெறுவார் என்பதன் மூலம் இத்திட்டத்தின் பலனை அறியலாம்.

சிறப்பு அம்சங்களும் நிபந்தனைகளும்

இத்திட்டத்தின் கீழ் செலுத்தப்படும் பணத்துக்கு வருமான வரிச் சட்டப் பிரிவு 80C-ன் கீழ் வரி விலக்கு பெறலாம். மேலும் இத்திட்டத்தின் கீழ் பெறப்படும் வட்டிக்கு கூட வருமான வரி செலுத்த வேண்டியதில்லை என்பது இத்திட்டத்தின் தனிச்சிறப்பு.

ஒருவேளை முதலீட்டுத் தொகையை, குறிப்பிட்ட தேதிக்குள் செலுத்தத் தவறினால், கணக்கு செயலிழந்துவிடும் நிலையில்ஆண்டுக்கு 50 ரூபாய் அபராதம் + ஒவ்வொரு ஆண்டும் செலுத்த வேண்டிய குறைந்தபட்ச தொகையை செலுத்தி மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரலாம்.18 வயதுக்குப் பிறகு யார் பெயரில் கணக்கு இருக்கிறதோ, அவரே கணக்கை இயக்க வேண்டும்.கணக்குதாரர் இறந்துவிட்டால் அல்லது கணக்குதாரருக்கு மோசமான உடல் நலக் குறைவு ஏற்பட்டாலோ, பெண்ணின் பாதுகாவலர் இறந்து கணக்கில் பணம் செலுத்துவது சிரமமாக இருந்தாலோ தகுந்த ஆதாரங்களைக் காட்டி கணக்கு வைத்திருக்கும் அலுவலகத்தில் சமர்பித்து கணக்கை முன் கூட்டியே மூடி பணத்தை எடுக்கலாம். ஆனால், ஒரு நிபந்தனை,கணக்கை தொடங்கி ஐந்து ஆண்டுகாலம் ஆகியிருக்க வேண்டும்.

இத்திட்டத்தில் கணக்கு தொடங்கப்பட்டிருக்கும் பெண் 10ஆம் வகுப்பு நிறைவு செய்த பிறகு அல்லது 18 வயது நிறைவடைந்த பிறகு மேற்படிப்புக்காக, கணக்கில் இருக்கும் மொத்த தொகையில் 50% வரை பணத்தை எடுக்கலாம்.

இத்திட்டம் முதலீடு செய்யத் தொடங்கி 21 ஆண்டுகளில் நிறைவடையும். 

தற்போதைய நிலைமையில் 7.6 சதவீதம் வட்டி கொடுக்கும் நிலையான, சிறந்த அரசு சேமிப்புத் திட்டம் எது என்றால் அது செல்வ மகள் சேமிப்புத் திட்டம் மட்டுமே. அஞ்சலகத்தில் தொடங்கும் வசதி, பெண் குழந்தைகளின் கல்வி, திருமணம் போன்ற விஷயங்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுவது, 250 ரூபாய் முதல் முதலீடு செய்யலாம் என்பதெல்லாம் இத்திட்டத்தின் சிறப்பம்சங்கள்.எல்லாவற்றிற்கும் மேலாக இது ஓர் அரசுத் திட்டம் என்பதால் பயப்படத் தேவை இல்லை. ஏழை எளிய மக்களுக்கு பயன் தரும் இந்த நல்ல திட்டத்தில் உங்கள் பெண்குழந்தையைச் சேர்த்து அதன் எதிர்காலத்தை வளமாக்குவோம்! 

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version