இந்த வாரத்தின் 2 பரபரப்புக்கள் ஒரே ஒற்றுமை என்ன?

Pushpa 1 Week 2 Cases

இந்த வாரத்தில் பரபரப்பாக பேசப்பட்ட நிகழ்வுகள் நிறைய இருந்தாலும் முக்கியமானவை இரண்டு. அந்த இரண்டு செய்திகளிலும் இடம்பெற்ற பெயர் புஷ்பா என்பதுதான் அந்த ஒற்றுமை. 1.புஷ்பா திரைப்படம், 2. நீதிபதி புஷ்பா கனேடிவாலா. இரண்டு செய்திகளையும் சற்று விரிவாகப் பார்ப்போம்.

புஷ்பா – திரைப்படம்

ராம்சரண் தேஜா, சமந்தா நடித்த வெற்றிப்படமான ரங்கஸ்தலம் படத்தை இயக்கிய பிரபல தெலுங்கு இயக்குனர் சுகுமார் இயக்கி அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, ஃபஹத் பாசில் நடித்து வெளிவந்துள்ள படம் ‘புஷ்பா’. படம் வருமா வராதா என்ற பரபரப்பு ஒரு புறம், பாடல் வரிகளை நீக்கக் கோரி போராட்டங்களைத் தாண்டி வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு பார்டரில் உள்ள காட்டுப்பகுதியில் சட்ட விரோதமாகச் செம்மரம் வெட்டும் கூலித்தொழிலாளியான புஷ்பா பாத்திரத்தில் அல்லு அர்ஜுன். கூலித்தொழிலாளியான அவர் கொள்ளைக்கூட்டக் கும்பலின் தலைவனாக ஆவதும் அதனால் ஏற்படும் சிக்கல்களும் அதை எப்படிச் சமாளிக்கிறார் என்பதுதான் கதை. வழக்கம்போல் தெலுங்கு மசாலா தூவிப் பரிமாறி இருக்கிறார் இயக்குநர்.திரைக்கதை பற்றிப் பெரிதாக அலட்டிக்கொண்டதுபோல் தெரியவில்லை.

தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையில் படம் வரும் முன்னரே பட்டிதொட்டி எல்லாம் பிரபலமாகிவிட்டது பாடல்கள்.அதிலும் ‘ஓ சொல்றியா’ பாடல் பல சர்ச்சைகளையும் கிளப்பியிருந்தை அறிவீர்கள் (https://www.newstrolly.com/pushpa-movie-o-solriya-create-problem/) செம்மரக்கட்டை கடத்தல் தொடர்பான படத்தில் செம கட்டையாக ஆட்டம் போட்டு இருக்கிறார் சமந்தா. திரையரங்கில் இப்பாடலுக்குப் பெரும் வரவேற்பு இருக்கிறது. மிரோஸ்லா குபா ப்ரோசெக்கின் ஒளிப்பதிவு காட்டுக்குள் இருக்கும் உணர்வை நம்முள் கடத்துகின்றன. டி20 மேட்சுகளில் கடைசிகட்ட ஓவர்களில் இறங்கி ஒருவர் அதிரடியாக ரன்ரேட்டை உயர்த்துவாரே அதேபோல்தான் ஃபஹத் பாசிலின் பாத்திரம். இரண்டாம் பாகத்தைப் பார்க்கவேண்டும் எனும் உத்வேகத்தை உண்டாக்குவது ஃபகத் பாசில்தான்.முதல் பாதி விறுவிறுப்பாக இருந்தாலும் இரண்டாம் பாதி,தியேட்டருக்கு வந்து ரொம்ப நாள் ஆகிவிட்டதோ எனும் உணர்வைத் தருகிறது. இரண்டாம் பாகத்துக்குக் காத்திருப்போம்.

நீதிபதி புஷ்பா கனேடிவாலா

இந்த வாரத்தின் இன்னொரு பரபரப்புக்குச் சொந்தக்காரர் நீதிபதி புஷ்பா கனேடிவாலா.

மஹாராஷ்டிர மாநிலம், மும்பை உயர் நீதிமன்றத்தில் பெண் நீதிபதியாக இருப்பவர் புஷ்பா கனேடிவாலா. மகாராஷ்டிராவில் 39 வயது நபர் 12 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக தொடுக்கப்பட்ட வழக்கில் நீதிமன்றம் நபரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.அவருக்கு போக்சோ சட்டத்தின் கீழ் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் அளித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் கிளை நீதிபதி புஷ்பா கனேடிவாலா, சிறுமியின் ஆடையை களையாமல் தான் அவர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

உடலும் உடலும் நேரடியாக தொடர்பில் இல்லாததால் இது போக்சோ சட்டத்தில் வராது எனக்கூறி போக்சோ சட்டத்தின் கீழ் தொடுக்கப்பட்ட வழக்கை ரத்து செய்தார். இதேபோல் மற்றொரு வழக்கில் சிறுமியின் கைகளைப் பற்றுவதும், பேண்ட் ஜிப்பை திறக்கச் செய்யவைப்பதும் போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் குற்றமில்லை எனக் கூறி தண்டனை பெற்றவரை விடுவித்துத் தீர்ப்பளித்தார். நீதிபதி புஷ்பா கனேடிவாலாவின் இந்த இரண்டு தீர்ப்புகளும் மக்களிடயே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவரை நிரந்தர நீதிபதியாக நியமிப்பதற்காக அளித்த ஒப்புதலை உச்ச நீதிமன்ற கொலிஜியம் திரும்பப் பெற்றது.

இவர் அளித்த இரண்டு தீர்ப்புகளும் ஒரு தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. நல்லவேளை அவர் நிரந்தர நீதிபதியாகவில்லை என்பதில்தான் நாம் மகிழ்ச்சியடைய வேண்டும்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version