தைக்கால் | பிரமிக்க வைக்கும் பிரம்புக்கிராமம்

thaikkal village

“கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள்; கவலை உனக்கில்லை ஒத்துக்கொள்” என்பது நாமக்கல் கவிஞர் வெ.இராமலிங்கம் பாடிய எக்காலத்துக்கும் பொருந்துகின்ற எளிய பாடலாகும். வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பதில், பொருளாதாரத்தை மேம்படுத்துவதில் கைத்தொழிலின் பங்கு முக்கியமானது. ஒரு கிராமமே பிரம்புத்தொழிலில் ஈடுபட்டு உலகமே வியக்கும் வண்ணம் புகழ்பெற்று இருப்பதைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா?

நாகை மாவட்டம் கொள்ளிடம் அருகே கோபாலசமுத்திரம் ஊராட்சியை சேர்ந்த தைக்கால் பகுதிதான் அத்தகைய பெருமையைக் கொண்ட பகுதி.

நாற்பது வயதைக் கடந்த பலருக்கும் பிரம்பு நினைவில் இருக்கும், கூடவே கண்டிப்பு மிகுந்த பள்ளிக்கூட ஆசிரியரும் நினைவுக்கு வருவார். நாற்பது வயது கடந்தவர்கள் ஒழுக்க சீலர்களாய், கல்வியாளர்களாய் இருப்பதற்குப் பிரம்பும் ஒரு காரணம் என்பதை மறுப்பதற்கில்லை. பிரம்பு என்பது வளையும் தன்மை கொண்ட வலிமையான தண்டுத்தாவரமாகும். இதைப் பயன்படுத்தி நாற்காலிகள், டைனிங்டேபிள், மேசைகள், சோபாசெட், ஊஞ்சல்கள், பிரோக்கள், அரிசிகூடை, பூஜைக் கூடை என பலவகையில் அழகழகான பொருட்களை செய்வதைத்தான் பிரம்புத்தொழில் என்கிறோம்.

சீர்காழியிலிருந்து சிதம்பரம் செல்லும் நெடுஞ்சாலையில்தான் இருக்கிறது தைக்கால் என்னும் இந்தப் பிரம்புக் கிராமம். வேளாங்கன்னி, நாகூர், காரைக்கால் போன்ற இடங்களை இணைக்கும் சாலை என்பதால் பரபரப்பாய் இருக்கிறது சாலை. அதன் ஓரங்களில் பளபளப்பாய் இருக்கிறது பிரம்பினால் செய்யப்பட்ட வீட்டு உபயோகப் பொருட்கள்.

பிரம்மலோகம் கேள்விப்பட்டிருப்பீர்கள், பார்த்திருக்க வாய்ப்பில்லை. இது பூவுலகில் நாம் காணக்கூடிய பிரம்பலோகம். கண்ணைக் கவரும் வேலைப்பாடுகள் நிறைந்த பிரம்புப் பொருட்கள் பிரமிக்க வைக்கின்றன. நாற்காலிக்கு சண்டைபோடும் நாடு நம் பாரத நாடு என்று பிரபல பாடல் உண்டு. இந்த கலைநயம் மிக்க நாற்காலியைக் கண்டால் அமர்வதற்கு எல்லோருக்குமே ஆசை வரத்தான் செய்யும்.

நல்ல தரமான பிரம்பை சிறியது, பெரியது என வகைப்படுத்தி வைத்துக்கொள்கிறார்கள். அதைத் தேவையான நீளங்களில் வெட்டி, தேவையான இடங்களில் தீயினால் சுட்டு வளைத்து, ஆனிகள், சுத்தியல் இவற்றைக்கொண்டு அவர்கள் பிரம்புப் பொருட்கள் செய்வதைப் பார்த்துக்கொண்டே இருக்கலாம். செய்து முடித்ததும் வார்னீஷ் அடித்து அழகுக்கு அழகு சேர்க்கிறார்கள்.

கொள்ளிடத்தின் கரையில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து வீட்டிலேயே தொடங்கப்பட்ட இந்தத் தொழிலுக்கு,இப்பொழுது பிரம்புகள் பீகார், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து  பிரம்புகள் வரவழைக்கப்படுகின்றன. சீர்காழியில் விளையும் மெல்லிய பிரம்புகளை வைத்து எடை தாங்கும் ஜாடி, கூடை, முறம், அர்ச்சனைத் தட்டு, அலங்கார கூடைகள் செய்யமுடியாது என்பதால் கடினமான, தரமான பிரம்புகளை பீகாரில் இருந்து இறக்குமதி செய்கிறார்கள். இங்கு விற்பனைக்கு இருக்கும் பொருட்கள் மட்டுமின்றி உங்களுக்குப் பிடித்த பொருட்களைச் செய்து கொடுக்க வேண்டும் என்றாலும் அதையும் செய்து கொடுக்கிறார்கள்.இப்பகுதியில் 25-க்கும் மேற்பட்ட தயாரிப்புக்கூடங்கள், கடைகள் இருப்பதனால் உங்களுக்குப் பிடித்த டிசைனில்,பிடித்த விலையில் வாங்கி மகிழலாம்.

ஆர்கானிக் பொருட்களை வாங்குவது, செக்கில் ஆட்டிய எண்ணெய்கள் என இயற்கைமேல் மக்களுக்கு நாட்டம் தற்போது அதிகரித்துள்ளதை யாராலும் மறுக்க முடியாது. விதவிதமாய் மரத்தில், உலோகத்தில், பிளாஸ்டிக்கில் கிடைக்காத நவ நாகரீகத் தோற்றத்தைப் பிரம்பு, சோபா, நாற்காலிகள் தந்துவிடும். ராயல் லுக் என்பார்களே அது பிரம்புப் பொருட்களில் பிரமாதமாய்க் கிடைத்துவிடுகின்றது. தமிழ் மக்கள் ரசனை மிக்கவர்கள் என்பதை இத்தரணிக்கு தெரிவிக்கும் சான்றுதான் இந்த பிரம்புத்தொழில்!

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version