மும்பையில் பார்க்கவேண்டிய முக்கியமான 10 இடங்கள் | சுற்றலாம் வாங்க

10 Places to visit in mumbai 1

இந்தியாவின் நான்கு முக்கிய பெருநகரங்களில் ஒன்றுதான் மும்பை. இது கண்ணைக்கவரும் பல சுற்றுலாத் தலங்களைத் தன்னகத்தே கொண்ட அழகான நகரம். மும்பைக்கு சுற்றுலா வருபவர்கள் பார்த்து ரசிக்கவேண்டிய 10 முக்கியமான இடங்களைப் பார்ப்போம்.

கேட்வே ஆஃப் இந்தியா

மும்பையில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களில் முதன்மையானது கொலாபா பகுதியில் அமைந்துள்ள கேட்வே ஆஃப் இந்தியா. இது இந்து முஸ்லிம் கட்டிடக் கலைகள் இரண்டறக் கலந்து வடிவமைக்கப்பட்ட ஓர் அதிசயம் ஆகும். மும்பையின் தாஜ்மகால் என்றும் செல்லமாக அழைக்கப்படும் இந்த இடத்தில் செல்ஃபி எடுத்துவிட்டால் அது வாழ்வின் உன்னத நிகழ்வாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க்

பாந்த்ரா – வோர்லி என மும்பையின் இரு பகுதிகளை இணைக்கின்ற ஒர் அற்புதமான, அழகான பாலம்தான் பாந்த்ரா-வோர்லி ஸீ லிங்க். நீரின் அழகை ரசித்தபடி இதில் பயணிப்பது ஒரு அலாதியான அனுபவம். நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட இந்த அழகிய மும்பை ஸீ லிங்க் மும்பையில் பார்க்க வேண்டிய முக்கிய இடங்களுள் ஒன்று.

ஜூஹு பீச்

கடற்கரை விரும்பிகள் தவறவிடக்கூடாத அழகிய கடற்கரை இந்த ஜூஹு கடற்கரை. இங்கு சூரியன் மறையும் காட்சி அவ்வளவு ரம்மியமான ஒன்று. மும்பையின் சிறப்புக்களான பானிபூரி, பேல்பூரி, வடா பாவ் என ஏகப்பட்ட உணவுகள் இங்கே கிடைக்கின்றன. கண்டு மகிழவும், உண்டு மகிழவும் ஏற்ற கடற்கரைதான் ஜூஹு கடற்கரை. இங்கு கடலை சாப்பிட்டுக்கொண்டே கடலை ரசிப்பது ஒர் இனிமையான அனுபவம்தான்.

மரைன் டிரைவ் அல்லது குயின்ஸ் நெக்லஸ்

மும்பையின் கண்ணைக்கவரும், அழகுமிக்க ஓர் இடம்தான் மரைன் ட்ரைவ். இருள் சூழத் துவங்கும்போது இங்குள்ள மின்விளக்குகள் ஒளிரத் தொடங்குகின்றன. இந்த மின்னொளியில் நரிமன் பாய்ண்ட்டில் இருந்து வொர்லி வரை செல்லும் சாலையின் வளைவு, ராணியின் நெக்லஸ் போன்று அழகுமிளிர்வது கண்கொள்ளாக் காட்சி.

சஞ்சய் காந்தி தேசிய பூங்கா

இது ஆசியாவில் மக்கள் அதிகம் பார்வையிடும் பூங்காக்களில் ஒன்றாகும். ‘நகரின் நுரையீரல்’ எனப்படும் இந்தப் பூங்கா பழமையான புத்த கோயில், வண்ணத்துப்பூச்சித் தோட்டம், படகு சவாரி, இரயில் சவாரி என அனைத்து தரப்பினரையும் கவரும் அம்சங்களைக் கொண்டது. குடும்பத்தோடு ரசிப்பதற்கு ஏற்ற இடம் இதுவாகும்.

நேரு கோளரங்கம்

குழந்தைகளுக்கு அறிவியலை விளையாட்டாக அறிமுகப்படுத்த, உகந்த இடம் வோர்லியில் உள்ள நேரு கோளரங்கம். நேரு மையத்தில் அமைந்துள்ள இந்த கோளரங்கம் கிரகங்கள், நட்சத்திரங்கள் மற்றும் பகல் மற்றும் இரவு சுழற்சிகளின் அழகிய உருவங்களுடன் கவர்ந்திழுக்கும் அம்சங்களைக் கொண்டது. இந்த கோளரங்கம் குழந்தைகளுக்கு ஒரு சிறந்த சுற்றுலா தலமாக மட்டுமல்லாமல், மும்பையில் குடும்பத்துடன் பார்வையிடவும் சிறந்த இடம் என்றால் அது மிகையல்ல.

எலிஃபாண்டா குகைகள்

மும்பை மாநகரத்தின் தென் கிழக்கில் 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள
எலிஃபாண்டா தீவில் அமைந்திருக்கும் எலிஃபாண்டா குகைகள், யுனெஸ்கோ நிறுவனத்தால், உலகப் பண்பாட்டுப் பாரம்பரியக் களமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. பழமையான இந்த அற்புதமான குகைக் கோயில்கள் மும்பையின் மிகவும் பிரபலமான சுற்றுலா தலங்களில் ஒன்றாகும். கேட்வே ஆஃப் இந்தியா பகுதியிலிருந்து இயந்திரப் படகுகள் எலிபெண்டா தீவிற்கு இயக்கப்படுகின்றன.

டாக்டர் பாவ் தாஜி லாட் அருங்காட்சியகம்

இது மும்பையின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பழமையான அருங்காட்சியகம் மற்றும் இந்தியாவின் இரண்டாவது பழமையான அருங்காட்சியகம் ஆகும். மும்பையின் வரலாறைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆர்வம் இருப்பவர்கள் அவசியம் காணவேண்டிய அற்புத இடம் இதுவாகும். இங்கு மும்பை வரலாற்றை மையமாகக் கொண்ட 3500 க்கும் மேற்பட்ட கலைப்பொருட்கள் மற்றும் பொருள்கள் உள்ளன.

ஹாஜி அலி மசூதி

மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் முகலாய பாணி கட்டிடக்கலையின் மிகச்சிறந்த வெளிப்பாடாய் அழகுற அமைந்துள்ளது, இந்த ஹாஜி அலி மசூதி. சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக கூட்டமாக ரசித்துச் செல்லும் உன்னதமான இடம் இது.

விக்டோரியா டெர்மினஸ்

மும்பையின் அழகுமிகு அடையாளங்களுள் ஒன்றுதான் வியக்க வைக்கும் விக்டோரியா டெர்மினஸ் (வி. டி ரயில் நிலையம்). தற்போது இது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் என்று பெயர் மாற்றப்பட்டிருக்கிறது. இதன் சுற்றிப் நடைபாதைகளிலும், சுரங்க வழிப்பாதைகளிலும் எண்ணற்ற எலெக்டிரானிக் பொருட்கள், கணினி பொருட்கள், ஆடை வகைகள், அஞ்சல் தலைகள் மற்றும் தொன்மையான நாணயங்கள் என அனைத்தும் கிடைக்கின்றன

Related Post

One thought on “மும்பையில் பார்க்கவேண்டிய முக்கியமான 10 இடங்கள் | சுற்றலாம் வாங்க”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version