விஸ்டாடோம் – இந்தியன் ரயில்வேயின் இணையில்லா அறிமுகம்

vistadome trains india

இந்த உலகில் பார்க்கப் பார்க்க சலிக்காதவை என யானை, கடல், ரயில் எனும் மூன்றையும் சொல்வார்கள். சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரையும் தன்பால் ஈர்க்க வல்லவை இவை. இவற்றில் ரயில் கூடுதலாக ஈர்க்க என்ன காரணம் என்றால் ரயிலைப் பார்ப்பதே  சுவாரசியமானது. அதில் பயணித்துப் பார்ப்பது எவ்வளவு சுவாரசியம்? அதிலும் குளுகுளு வசதி, வெளியே வேடிக்கை பார்க்கும் வகையில் கண்ணாடி சன்னல்கள், சொகுசான இருக்கைகள் இவையும் சேர்ந்து இருந்தால்? நினைக்கவே சுகமாய் இருக்கிறதல்லவா? அப்படி என்றால் நீங்கள் விஸ்டாடோம் பற்றித் தெரிந்துகொள்வது அவசியம்.

இந்திய இரயில்வேயின் புதியதோர் அறிமுகம்தான் விஸ்டாடோம். இது சுற்றுலாவை மேம்படுத்தவும், இரயில் பயணங்களை மறக்க முடியாத, இனிமையான ஒன்றாகவும் மாற்றுகிறது. உங்கள் பயண அனுபவத்தைப் பரவசமாக்கி அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் அழகு முயற்சி இந்த விஸ்டாடோம்.

விஸ்டாடோம் என்பது  இரயில் பயணிகளுக்கு, சொகுசான பயணத்தையும், சன்னல் வழியே வெளியே வேடிக்கை பார்த்துக் கொண்டே பயணிக்கும்  இனிமையான அனுபவத்தை வழங்குவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு அதிநவீன ரயில்பெட்டி ஆகும். பரந்து விரிந்த ஜன்னல் கண்ணாடிகள் மற்றும் பரவசமூட்டும் கண்ணாடி கூரை, 180 டிகிரியில் சுழற்றக்கூடிய இருக்கைகள் மற்றும் புஷ்பேக் நாற்காலிகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள்.

விஸ்டாடோம் பெட்டிகள்  சென்னையில் உள்ள இன்டக்ரல் கோச் பேக்டரியில் தயாரிக்கப்படுகின்றன. இதற்கு  LHB (Linke-Hofmann-Busch) எனும் தளம்/தொழில்நுட்பம்  பயன்படுத்தப்படுகிறது.. பயணிகளுக்கு வானத்தைப் பார்க்கும் வகையில் கண்ணாடி கூரைகள் அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பம்சம். வானத்தைப் பார்க்கும்போது கண்ணைக் கூசாமல் இருக்கும் வண்ணம் இந்தக் கண்ணாடிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

ஏசி, விரும்பியவற்றை LED வழியாகப் பார்க்கும் வசதி, சிறு உணவறை,    குளிர்சாதன பெட்டிகள், அடுப்புகள், கோச்சின் முடிவில் பல அடுக்கு ஸ்டீல் லக்கேஜ் அலமாரிகள், ஒவ்வொரு பயணிக்கும் தனித்தனி மொபைல் சார்ஜிங் அவுட்லெட்கள், சிசிடிவி கண்காணிப்பு, தீ பாதுகாப்பு உபகரணங்கள், கழிப்பறைகள், தானியங்கி நெகிழ் கதவுகள், ஜிபிஎஸ் அடிப்படையிலான தகவல் அமைப்பு, பிரெய்லி மொழியில் எழுதப்பட்ட இருக்கை எண்கள், உதவியாளர்கள், சன்னல் திரைச்சீலைகள் என எக்கச்சக்க வசதிகள் செய்யப்பட்டு உங்கள் பயணம் சொகுசாய் அமைய உதவுகின்றன.

இந்திய ரயில்வே, மும்பை-புனே மற்றும் பெங்களூரு-மங்களூரு ஆகிய இரண்டு வழித்தடங்களில், இந்த ‘விஸ்டாடோம்’ பெட்டிகளை  அறிமுகப்படுத்தியுள்ளது. நாட்டின் வடகிழக்கு பகுதிகளை உள்ளடக்கிய பிற வழித்தடங்களிலும், அழகுமிக்க பிரபலமான சுற்றுலா வழித்தடங்களிலும் இவற்றை அறிமுகப்படுத்தி அதிக வருவாயை ஈட்ட ரயில்வே திட்டமிட்டுள்ளது.

குடும்பத்துடன் பயணம் செய்ய உகந்த போக்குவரத்து, இரயில்வேதான். குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் பாதுகாப்பானதும் அதுவே. அப்படிப்பட்ட ரயிலில்,’விஸ்டாடோம்’ பெட்டியில் இப்படி ஓர் உல்லாச பயணம் மேற்கொண்டால் அது என்றென்றும் மறக்க முடியாத பயணமாய் இருக்கும் என்பதில் எந்த ஐயமில்லை!

By சிவ.அறிவழகன்

எண்ணெய் மற்றும் எரிவாயுத்துறையில் பணிபுரிபவர். 2009ல் இருந்து இணையத்திலும் தமிழ் இதழ்களிலும் தளையிலா எழுத்தாளராக (Freelance Writer) இருந்துவருகிறார். தமிழ் குறுக்கெழுத்துப்போட்டி படைப்பாளராக பணிபுரிகிறார்.

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version