டெலிப்ராம்ப்டர் எனும் சொல்லை சமீப காலங்களில் அதிகம் கேள்விப்படுகிறோம். ஊடகவியலாளர்களும், அரசியல்வாதிகளும் அதிகம் பயன்படுத்துகின்ற இந்த டெலிப்ராம்ப்டர் என்றால் என்ன என்பதைப் பற்றிய ஓர் அறிமுகத்தை இன்று பார்ப்போம்.
டெலிப்ராம்ப்டர் என்றால் என்ன?
மின்னணுத்திரை வாயிலாக அதைப் பயன்படுத்துவர்க்குக் குறிப்புக்களை காண்பிக்கும் ஓர் அமைப்புதான் டெலிபிராம்ப்டர். டெலிபிராம்ப்டர் என்பதைத் தமிழில் தொலை உரைகாட்டி எனலாம்.
செயல்படும் விதம்
வீடியோ கேமராவின் லென்ஸின் முன், பெரும்பாலும் கீழே குறிப்புகள் அடங்கிய திரை வைக்கப்படுகிறது. கேமராவில் இந்தத்திரை பதிவாகக் கூடாது என்பதற்காக இந்த ஏற்பாடு. குறிப்புக்கள் அடங்கிய திரையில் உள்ள சொற்கள் தெளிவான கண்ணாடி அல்லது பீம் ஸ்ப்ளிட்டரைப் பயன்படுத்தி பேசுபவரின் கண்களுக்குத் தெரியும்படி அமைக்கப்படுகின்றன. இதனால் பேசுபவர் படிக்கப்படுவதுபோல் அல்லாமல் நேரடியாக உரையாற்றுவதுபோன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.
தொலைக்காட்சிகளில் செய்திகள் வாசிப்பவருக்கு எதிரில் ஒரு தனித்துவமான திரை இருக்கும், அவர்கள் படிக்க வேண்டிய முக்கிய செய்திக் குறிப்புகள் அதில் தெரியும். அதைப்பார்த்துத்தான் அவர்கள் சரளமாக தங்குதடையின்றி வாசிப்பார்கள்.
அரசியல் தலைவர்கள் உணர்வுபொங்கப் பரப்புரை செய்யும்போதும், எழுச்சி உரைகளை எடுத்தியம்பும்போதும் சொற்பொழிவின் குறிப்புகள் அவர்கள் எதிரே இருக்கும் திரையில் தெரியும். அவரை எதிரிலிருந்து கொண்டு படம் பிடிக்கும் எந்தக் கேமராவிலும் அது தெரியாதவண்ணம் அது அமைக்கப்பட்டிருக்கும். இப்படி, தொலைவிலிருந்து குறிப்புகளை, உரையைக் காட்டும் அமைப்புதான் டெலிபிராம்ப்டர்.
பயன்கள் | Teleprompter Uses In Tamil
ஒரு புத்தகத்தை, குறிப்பை வைத்துப் படித்தால் பார்ப்பவர்களுக்கு அது ஆர்வத்தைக் குறைக்கும். சுவாரசியமாக இருக்காது. டெலிபிராம்ப்டரைப் பயன்படுத்தினால் அது நேரடியாகப் பேசுவதுபோன்ற ஒரு தோற்றத்தை பார்வையாளர்களுக்குக் கொடுக்கிறது.
பொதுக்கூட்டங்களில் பேசும்போது புள்ளிவிவரங்கள் மிக முக்கியம். எல்லாவற்றையும் நினைவில் வைத்துப் பேசுவது என்பது எல்லோராலும் இயலாத காரியம். பேச்சாளர்களுக்கும், பெரிய தலைவர்களுக்கும் அவரது பேச்சுக்கள் சிறப்பாக அமைய பேருதவி புரிகிறது இச்சாதனம்.
திரைத்துறை உள்ளிட்ட ஊடகத்துறையில் இருப்பவர்க்கு இது ஒரு வரப்பிரசாதம். வசனங்களை மறந்து வாடுவோர், சரளமாகப் பேசுவதில் சங்கடம் உள்ளவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமல்லாமல், அனைவருக்குமே வசனங்களை இயல்பாகப் பேச இவை உதவுகின்றன.
தெரியாத மொழியில் தெரிந்ததுபோல் உரையாற்ற விரும்பும் அனைவருக்கும் இது ஒரு அட்டகாசமான ஒரு அறிவியல் சாதனம்.
அரதப்பழசான துண்டுச்சீட்டுகளில் குறிப்பெழுதி மேடைகளில் படிப்பதன் அறிவியல் வடிவம்தான் இந்த டெலிபிராம்ப்டர் என்றால் அது மிகையல்ல.