நீங்கள் சமூக வலைத்தளங்களில் அதிக ஆர்வத்துடன் இருப்பவர் எனில் நீங்கள் பூமர் அங்கிள் என்பதையும், ஓகே பூமர் என்பதையும் அறிந்திருப்பீர்கள். நம்மில் பலர் அதன் பொருளைத் தெரியாமலே அதைப் பயன்படுத்தவும் தொடங்கியிருப்போம். அது என்ன பூமர் அங்கிள் எஸ்டிடி? என்பவர்களுக்கு பூமர் அங்கிள் என்பது பற்றிச் சில சுவையான, அறிந்திராத தகவல்களை இங்கு பார்ப்போம்.
பூமர் அங்கிள்- ஓர் அறிமுகம்
பழமை பேசும் முதியவர்கள் அல்லது பேசும் கருத்துக்களால் முதியவர்களாய் ஆனவர்களைக் கிண்டல் செய்யும் தொனியில் பூமர் அங்கிள், ஓகே பூமர் அங்கிள் என்பவை பயன்படுத்தப்படுகின்றன. அதாகப்பட்டது, நாங்கெல்லாம் அந்தக்காலத்துல என ஒருவர் பேச்சைத் தொடங்கும்போதே அவர் பூமர் அங்கிள் என்பது முடிவு செய்யப்படுகிறது. பூமர் அங்கிள் என்பது பெரியவர்களை காயப்படுத்தாமல், நாசூக்காகக் கலாய்க்கப் பயன்படுகிறது.
பூமர் என்றொரு சூயிங்கம்/பபிள்கம் ஜவ்வாய் இழுக்கும் தன்மை கொண்டது என்பது நாம் அறிந்ததே. அதுபோல சொல்ல வந்த செய்தியைச் சுருங்கச் சொல்லாமல் இழுத்துக்கொண்டே செல்பவர்களும் பூமர் அங்கிள் என்றே அழைக்கப்படுகின்றனர்.
இது தமிழ்நாட்டில் எப்படிப் பிரபலமானது?
தமிழ் கூறும் நல்லுலகில் இந்த பூமர் எனும் சொல்லை பிரபலப்படுத்தியது பரிதாபங்கள் எனும் யூடியூப் சேனல்தான். அவர்களின் வீடியோ ஒன்றில் இந்த பூமர் அங்கிள் என்பதை அடிக்கடி பயன்படுத்தி இருந்தனர். அது தற்போது மீம்ஸ், ட்ரோல் வீடியோஸ் பலவற்றிலும் இடம் பிடித்து வைரல் ஆகியுள்ளது.
உண்மையில் யார் இந்த பூமர் அங்கிள்கள்?
இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்ததும் மேலை நாடுகளில் குழந்தைகளின் பிறப்பு விகிதம் அதிகமானது. போர் முடிந்து வீடு வந்த வீரர்களின் மகிழ்ச்சி, போருக்குப்பின் உலகம் அமைதி பூங்காவாய், பாதுகாப்பானதாக இருக்கும் என்ற நம்பிக்கை இவையெல்லாம் 1946 முதல் 1964 வரை உள்ள காலகட்டத்தில் குழந்தைபிறப்பின் விகிதத்தைக் கூட்டியது. உலகெங்கும் இந்த காலகட்டத்தில் கிட்டத்தட்ட 7 கோடி குழந்தைகள் பிறந்தன.அவைதான் பூமர் அங்கிள்களாக இந்தப் பூமியில் உலவுகின்றன. அதாவது தற்போது 57 முதல் 75 வயதுக்கு உட்பட்டவர்கள் பூமர் அங்கிள்கள் எனப்படுகிறார்கள்.
அது என்ன “ஓகே பூமர்?”
பூமர் அங்கிள்கள், இளம் தலைமுறையினரிடம் தங்கள் அனுபவங்களைப்பற்றி, நாங்கள்லாம் அந்தக் காலத்திலேயே.. என ஆரம்பித்து தங்கள் பெருமைகளைச் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ‘ஆரம்பிச்சிட்டான்டா அரிஸ்டாட்டில்’ என அதைச் சகித்துக் கொள்ள முடியாதவர்கள் தான் ஓகே பூமர் என்று ஜாலியாக அவர்களைக் கலாய்க்க துவங்கினார்கள். அதைத்தான் இப்போது சமூக வலைத்தளங்கள் பலவற்றிலும் பரவலாகப் பார்க்கிறோம்.
நரைகூடிக் கிழப்பருவம் எய்தும் நிலை வந்தவர்கள்தான் என்று இல்லை, நடைமுறைக்கு ஒவ்வாத பழமைவாதம் பேசினால் நாமும் பூமர் அங்கிள்களே!!!